Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 22 அக்டோபர், 2011

தீபாவளிக்கு குபேரனை வணங்குங்க

பண்டிகைகளின் ராஜா என்று தீபாவளியைச் சொல்வர். காரணம், அதிகம் செலவழியும் பண்டிகை இதுதான். செல்வச்செழிப்பு தீபாவளியன்று மட்டுமில்லாமல், ஆண்டு முழுவதும் தொடர லட்சுமியின் அருள் பெற்ற குபேரனின் அருட்கண் பார்வை தேவை. தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில் விமானத்தில் யானையில் அமர்ந்த குபேரனைத் தரிசிக்கலாம்.
தல வரலாறு: கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்த போது, உலகை சமப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தார். அவரது சீடரான உரோமச ரிஷிக்கு தாமிரபரணிக் கரையின் பல இடங்களில் சிவலிங்கம் அமைக்கும் எண்ணம் எழுந்தது. அகத்தியரின் ஆலேசனைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அவை ஒதுங்கிய இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில், அவ்விடங்களில் கோயில்கள் எழுந்தன. ஒன்பதாவது மலர் கரை ஒதுங்கிய தலம் சேர்ந்தபூமங்கலம்.
தேவியருடன் குபேரன்: கருவறையின் மேலுள்ள விமானத்தில் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தேவியர் அவருடன் இருக்கின்றனர். தேவியருடன் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். கருவறையில் கைலாசநாதர், சுக்கிர அம்சத்துடன் காட்சி தருகிறார். அம்பாள் அழகிய பொன்னம்மையின் பெயரிலேயே "பொன்' இருக்கிறது. இவள் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
விமானத்திலுள்ள குபேரரை வணங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில், சுக்கிரன் அனுகூலமாக இல்லாதவர்கள், நவக்கிரக மண்டபத்திலுள்ள சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி, மொச்சைப்பொடி சாதம், தயிர்ச்சாதம் நைவேத்யம் படைத்து, வெண்தாமரை மலர் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரை நேரத்தில் (காலை 6-7) இவரை வழிபடுவது விசேஷம்.
தலசிறப்பு: இக்கோயில் இரண்டு வாசல்களுடன் அமைந்திருக்கிறது.கன்னி விநாயகர், சந்திரன், சூரியன், சொக்கநாதர், மீனாட்சியம்மன், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள முருகனை வலதுபுறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காணலாம். இக்கோயிலை பாண்டியன் குலசேகரன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என்பதற்கு சாட்சியாக மதுரை சொக்கநாதருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தீர்த்த சிறப்பு: தாமிரபரணி இத்தலத்தின் தீர்த்தம். நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசத்தில், பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, இவ்வூர் அருகிலுள்ள புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தை மற்றும் ஆடி அமாவாசையில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.
திறப்பு: காலை 7- 9.30 மணி, மாலை 5.30- 7.30 மணி.
இருப்பிடம்: திருநெல்வேலியி லிருந்து 50 கி.மீ.,தூரத்தில் ஆத்தூர். அங்கிருந்து புன்னக்காயல்
பஸ்களில் 3 கி.மீ., தூரத்தில் சேர்ந்தபூ மங்கலம். ஆத்தூரில் இருந்து ஆட்டோ உண்டு.
போன்: 94883 42861.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்